தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறுகையில்,
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர் மீது விசாகா கமிட்டியில் மாணவி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாகா கமிட்டி குழு சம்பந்தப்பட்ட மாணவரை ஒரு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்கு மருத்துவ கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.