குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி நீர் சென்று குறுவை சாகுபடி அமோகமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யத் தொடங்கியதுடன், ஆரம்பமே கனமழையாக கொட்டியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஜூன் மாதமே அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து அங்கு பலத்த மழை கொட்டுவதால் கர்நாடகத்தின் கபினி, கே. ஆா்.எஸ். அணைகளின் உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது.
நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று கலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 1 லட்சத்து 400 கன அடியாக அதிகரித்துள்ளது. தற் நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 1.04 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘இதுபோல மேட்டூர், பவானி கூடுதுறை உள்பட காவிரி ஆற்றின் எந்த ஒரு பகுதியிலும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமராவதி, பவானி ஆறுகளின் வெள்ளப்பெருக்கும் காவிரியில் கலந்து வருகிறது. எனவே திருச்சிக்கு இன்று மாலை வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மக்கள் இறங்க வேண்டாம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து சலவைத்தொழிலாளர்கள் தங்கள் உடமைகளுடன் வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.