பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், லக்னோ மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையிலும் இந்த நுண்துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், “கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே, குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்த எச்சரிக்கை வாசகங்களைக் குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இருப்பினும், ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால் இப்போதே எச்சரிக்கை வாசகங்களை ஒட்டினால் மக்களிடையே தேவையற்ற குழப்பம் ஏற்படும் என உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த ஆய்வுகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தியதோடு, ஆய்வுகள் முடியும் வரை எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டுவதை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தனர்.

