மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
பல்வேறு நாடுகளும் தங்களுடைய குடிமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில், துபாயில் இருந்து 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களை ஏற்றி கொண்டு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தடைந்தது.
மேற்காசியாவில் காணப்படும் பதற்ற சூழலில் வெளிநாட்டில் இருந்து டெல்லிக்கு வந்த முதல் இந்திய விமானம் இதுவாகும். எங்களுடைய பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.
இதற்காக தன்னுடைய குழுவினருக்கும், மத்திய அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் மற்றும் துபாயில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொண்டது.

