Skip to content

முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இவை அனைத்தையும் நிறுத்திவிட்டார் என்றார். அப்போது அவரிடம், தமிழக அரசு அதிகளவில் கடன் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், `ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றது. அதற்கு ஓராண்டிற்கு வட்டி மட்டும் ரூ.36,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை தோராயமாக வரும் என்றார்.

கூட்டணி பிரச்னை தொடர்பாக திருமாவளவன், ராமதாஸ் இருவரும் பேசினால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என செல்வப் பெருந்தகை கூறியது தொடர்பான கேள்விக்கு, `இது அவரது கருத்து. கலைஞர் ஆட்சிக் காலத்தில் இருந்து, தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க் கட்சிகளையும் இணைத்துதான் தேர்தலை சந்தித்துள்ளோம். திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விசிக என அனைத்து கட்சிகளும் நம்முடன் உள்ளன. கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை. வந்தால் நிச்சயமாக வரவேற்று, அது குறித்து முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!