கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகளும் கௌரவமும் வழங்கப்பட்டது.
விழாவின் நிறைவாக, மொத்தம் 275 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாம் வாழும் காலத்தில் அனைவரும் மனிதநேயத்தைப் பின்பற்றி, மனித குலத்திற்கு நன்மை சேர்க்கும் வகையில் வாழ்வதே சிறந்தது” என்று வலியுறுத்தினார்.
இவ்விழாவில் எம்.எல்.ஏ-க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

