ஆடி மாத பிறப்பை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்றனர். இந்த நிலையில் ஆடி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான வசதிகள் குறித்தும், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் தீவிரமாக திருக்கோவில் ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு வாழைப்பழத்தை பிரசாதமாக வழங்கி அவர்களிடம் பல்வேறு நிறைகுறைகளை கேட்டு அறிந்தார். இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் விரைந்து தரிசனம் செய்ய என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து அண்ணாமலையார் திருக்கோவில், உள் மாடவீதி, வெளி மாடவீதி, ராஜகோபுரம், 16 கால் மண்டபம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக 50 ரூபாய் கட்டண தரிசனம் செல்லும் வழி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பிரேக் தரிசனம் செய்வதற்கு தனி பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் இடங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வரிசையில் சென்று ராஜகோபுரம் வழியாக உள்ளே செல்வதற்கான புதிய பாதைகளையும் ஆய்வு மேற்கொண்டு அப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் வழிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக விரைந்து சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து வழிகளையும் விரைவில் கண்டறிந்து அதற்குண்டான பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். தேரோடும் வீதியில் தற்போது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் மாத வீதியில் குறிப்பாக தேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களின் அளவுகளை கண்டறிந்து, திருத்தேர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சிமெண்ட் சாலை அமைத்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.