அரியலூரில் இன்று அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, CITU தொழிற்சங்கம் நீண்ட காலமாக போராட்டத்தில் உள்ளது. அவர்களை அழைத்துப் பேசி உள்ளோம்.
தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில் 3 ஆண்டுகளில் 2 ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் 1 ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிப்பதற்கு 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சி முடியும் நேரத்தில் முடிக்காமல் விட்டுச் சென்றனர். திமுக ஆட்சியில் ஒருமுறை 5% ஊதிய உயர்வும், அடுத்த முறை 6% ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பண பலன்களை வழங்க 1100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான நிதியை வழங்கவும், நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கடந்த காலங்களில் புதிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டுச் சென்றனர். தற்போது அவற்றை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் புதிய பேருந்துகளை வாங்காமல் அதிமுக அரசு சென்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
பொதுமக்களின் பாராட்டைப்பெறும் துறையாக, போக்குவரத்து துறை மாறியிருக்கிறது. தீபாவளி-பொங்கல் போன்ற காலங்களில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை சேவை ஆற்றுவதை அனைவருமே பாராட்டுகின்றனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் CITU தொழிற் சங்கத்தினர், தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.