தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், இன்று 6500 சதுர அடி பரப்பளவில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டினார். இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில் முதற்கட்டமாக அடிப்படை 50 கைத்தறிகள் செயல்படக்கூடிய வகையில் நெசவு தொழிற்கூடம்,

மூலப்பொருட்கள், கிடங்கு, நெசவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளுக்கான அலுவலகம் மற்றுப் நெசவாளர்களுக்கு குடிநீர்வசதி, சிற்றுண்டி வளாகம், வாகனம் நிறுத்தும் வசதி, ஓய்வறை மற்றும் கழிவறை வசதிகளுன் கட்டப்படவுள்ளது.
மேலும் இந்த கைத்தறி பூங்கா அமைப்பதன் மூலம் செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல் மற்றும் மருதூர் பகுதிகளிலுள்ள கைத்தறி நெசவாளர்களும். கைத்தறி நெசவுதொழில் தெரிந்தும் வீட்டில் போதிய இடவசதி இன்மை காரணமாக நெசவு தொழிலை மேற்கொள்ள இயலாத நெசவாளர்களும் மற்றும் நெசவுக்கு முந்தைய பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களும் ஒரே இடத்தில் தங்கள் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500-600 வரை வருவாய் ஈட்டும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செங்குந்தபுரம் சிறிய அளவிளான கைத்தறி பூங்காவில், வருடத்திற்கு 75000 மீட்டர் ஜவுளி, இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.200.00 இலட்சம் மதிப்பிலான ஜவுளி இரகங்கள் விற்பனை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கும்பகோணம் சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் கைத்தறித் துறை பணியாளர்கள், சங்க பணியாளர்கள் மற்றும் திரளான நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

