தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டார் மோடி. இந்த குற்றச்சாட்டை மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழகத்தில் நுழைவதை வீழ்த்துவதற்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த சமூக நீதியை நிலைநாட்டவும்தான் கடந்த 8 ஆண்டிற்கு முன் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்தது.
வரும் தேர்தலிலும் இந்த கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தலுக்கு பின்னரும் மீண்டும் முதலமைச்சராக ஆட்சி அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடி விட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது. இது எச்சரிக்கை மணி. அடுத்து டெல்லிக்கு இந்திரபிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும், தலைநகரை வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளிடம் திட்டம் மற்றும் உள்நோக்கம் இருக்கிறது. எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
திமுக வெற்றிக்கு எப்படி நான் ஒரு காலத்தில் முழு மூச்சாக பாடுபட்டேனோ, இப்போதும் அதே உணர்வுடன் பாடுபடுவேன் என்றார்.

