தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல் நாளில், சிராவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி – ப.ஜீவா நினைவு அரங்கம், குன்றக்குடி அடிகளார் சிலை மற்றும் காரைக்குடியில் கவியரசர் முடியரசனார் சிலை ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். இரண்டாம் நாளில், ரூ.61.78 கோடி மதிப்பிலான செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ரூ.100.45 கோடி மதிப்பிலான சட்டக்கல்லூரி ஆகியவற்றைத் திறந்து வைக்கும் முதல்வர், கழனிவாசல் பகுதியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும், சுமார் ரூ.2,559 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 15,453 பயனாளிகளுக்கு ரூ.205 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

