கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர்……
கிறிஸ்தவ மக்களின் புனித பண்டிகையான கிறிஸ்மஸ் விழாவில் கேக் என்பது முக்கிய இடம் பெறும். அதற்காக பல்வேறு நட்சத்திர விடுதிகளிலும் உலர் பழங்கள் மற்றும் மதுபானங்களை கொண்டு பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடத்தப்படும்.அந்த வகையில் கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விடுதியின் பொது மேலாளர் அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகரில் செயல்பட்டு வரும் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பங்கேற்று ராட்சத டிரேவில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ எடையிலான பாதாம், பிஸ்தா ,முந்திரி, கிஸ்மிஸ், செர்ரி ,வால்நட்,
அத்திப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான உலர் பழங்களில் பிராந்தி, விஸ்கி, ரம் ,ஒயின் போன்ற மதுபானங்களை ஊற்றி கேக் கலவையை தயாரித்தனர். இந்தக் கலவையை ராட்சத குடுவைகளில் அடைத்து வைத்து சுமார் இரண்டு மாத காலத்திற்கு பதப்படுத்தி வைத்து பிறகு அதன் மூலம் பிளம் கேக் தயாரிக்கப்படும் என்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு என்பது ஒரு பாரம்பரியமான நிகழ்வு என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் விடுதியின் பொது மேலாளர் அமர்நாத் தெரிவித்தார்.இதேபோல் இந்த கண்கவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் அதில் பங்கேற்ற பெண்கள் ஆனந்தத்துடன் தெரிவித்தனர்.