கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (31) இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் செல்லும் சாலையில் திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் ஆறு மாத காலமாக தகர சீட்டாலான துணிக்கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் இரவு நேரங்களில் ஒருவர் தூங்குவது வழக்கம் ஆனால் நேற்று இரவு சதீஷ்குமாரின் தந்தை உறங்கிக்
கொண்டிருந்தார். அப்போது நேற்று நள்ளிரவு டீ சாப்பிட்டு வரலாம் என்று வெளியே சென்ற நேரத்தில் இதை அறிந்த மர்ம நபர்கள் தகர சீட்டை துளையிட்டு உள்ளே நுழைந்து ரூ.7800 பணம் மற்றும் சிசிடி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
பின்னர் வெங்கடேசன் திரும்பி வந்து பார்த்தபோது கடை துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தனது மகனிடம் கூறிய நிலையில் சதீஷ்குமார் இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணையும் மேற்கொண்டார். நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் தகர சீட்டை துளையிட்டு பணம் மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

