கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், தோகமலை, நங்கவரம், கடவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதி, மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
வழங்க வந்தனர். அப்போது காவல்துறை சார்பில் ஐந்து நபர்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரும் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் மனு அளிக்க அனைவரும் தனித்தனியாக சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.