கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப் போலீசார் மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மனைவி சஜிதா (54) மற்றும் மகள் கிரீமா (30). கிரீமாவுக்கும் உன்னி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 200 பவுன் நகை மற்றும் வீடு சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னி கிருஷ்ணன் கிரீமாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் அதிருப்தியடைந்த உன்னி கிருஷ்ணன், திருமணமான 25-வது நாளிலேயே மனைவியைப் பிரிந்து வெளிநாடு சென்றுவிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பேசாமலும், ஊருக்குத் திரும்பாமலும் உதாசீனம் செய்து வந்துள்ளார். எப்படியாவது கணவர் மனம் மாறுவார் என்று கிரீமாவும், அவரது தாய் சஜிதாவும் காத்திருந்தனர். இதற்கிடையில் ராஜீவ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலமானார். அண்மையில் உறவினர் ஒருவரின் இறப்பிற்காக ஊருக்கு வந்த உன்னி கிருஷ்ணனைச் சந்தித்து, கிரீமாவுடன் சேர்த்து வைக்க உறவினர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களை உன்னி கிருஷ்ணன் அவதூறாகப் பேசி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தாயும் மகளும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு, வீட்டில் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் கைப்பற்றிய சஜிதாவின் உருக்கமான கடிதத்தில், “உடுத்திய ஆடையைக் கழற்றி எறிவது போல எனது மகளைத் தனிமைப்படுத்திச் சென்றுவிட்டார் உன்னி கிருஷ்ணன். நாங்கள் இறந்த பிறகு எங்கள் சொத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட அவரோ அல்லது அவரது உறவினர்களோ தொடக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்கொலைக்குத் தூண்டியதாக உன்னி கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர் வெளிநாட்டுக்குத் தப்ப முயல்வதை அறிந்து மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

