நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் பவிதா, தனது கணவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனி என்பவரது வளர்ப்பு நாய், வீட்டின் கதவு திறந்திருந்ததால் வெளியே ஓடி வந்தது.
அந்த நாய், தெருவில் நடந்து சென்ற பவிதாவை விரட்டிச் சென்று கடித்தது. இதனால் நிலை குலைந்த பவிதா, கீழே விழுந்து வலி தாங்காமல் கதறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த பவிதாவின் தாய், தனது மகளின் அருகே நின்று குரைத்துக் கொண்டிருந்த பழனியின் வளர்ப்பு நாயை விரட்ட முயன்றார்.
அப்போது அந்த நாய் அவரையும் விரட்டி விரட்டி கடித்தது. இதற்கிடையில் பழனியின் குடும்பத்தினர், தங்கள் வளர்ப்பு நாயிடம் இருந்து பவிதாவையும், அவரது தாயையும் காப்பாற்ற சிறிதும் முயற்சிக்காமல், கதவை பூட்டிக் கொண்டு உள்ளே நின்று வேடிக்கை பார்த்தனர்.
இதையடுத்து பவிதாவும், அவரது தாயும் தாங்களாகவே சுதாரித்து அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் அந்த நாய் அவர்களை விடாமல் துரத்தியதால், பவிதா ஒரு கட்டையை எடுத்து நாயை அடித்து விரட்டினார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட பவிதாவும், அவரது தாயும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் தங்கள் வளர்ப்பு நாய் பவிதாவை கடித்தபோது பழனி குடும்பத்தினர் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

