Skip to content

ஜெர்மனியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஜெர்மனி : முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 7 நாள் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார்.

நேற்றைய தினம் ஜெர்மனியில் உள்ள தமிழ் உறவுகளை சந்தித்த அவர், “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியில் பங்கேற்று, முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டுக்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதன்படி, ரயில் கதவுகள், பிரேக்குகள் தயாரிக்கும் நார்-ப்ரீம்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காற்றாலைக்கு டர்பைன் தயாரிக்கும் நார்டெக்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திறன்மிகு மின் மோட்டார்கள் தயாரிக்கும் இபிஎம் பாஸ்ட் நிறுவனம் ரூ. 201 கோடி முதலிட்டில் விரிவாக்கம் செய்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (1.9.2025) ஜெர்மனி நாட்டின், டசெல்டோர்ஃப் நகரில், Nordex குழும நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் காற்றாலை உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர்.

நார் -பிரெம்ஸ் (Knorr Bremse) நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Knorr Bremse நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா (Mr. Marc Llistosella), துணைத் தலைவர் ஒலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.

மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ebm-papst நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ebm-papst நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுதிட்டார்.

error: Content is protected !!