Skip to content

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது….

இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மாரிஸ் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், 10 மணியளவில் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிகளையும் இரயில்வே, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை வரவழைத்து நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

கடந்த 11.01.2025 அன்று முதல் DISHA கூட்டத்திலேயே பழைய மாரிஸ் இரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணியை விரைவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

பின்னர் 23.04.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்து, இப்பணியை விரைவாக நிறைவு செய்ய வலியுறுத்தினேன். ஜூன் 2025 இறுதிக்குள் பணிகளை முடிப்பதாக திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் உறுதி அளித்திருந்த நிலையில், முன்னதாகவே 13.05.2025 அன்று பழைய மாரிஸ் இரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது. அதற்காக 10.06.2025 அன்று நடந்த DISHA கூட்டத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, புதிய மேம்பாலக் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்குமாறு

கேட்டுக்கொண்டேன். அப்போது, விரைந்து பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். தற்போது, மாரிஸ் மேம்பாலத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். குறிப்பாக, 20.06.2025 அன்று மீண்டும் ஆய்வு செய்து, புதிய மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டுமென இரயில்வே துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.

மாரிஸ் மேம்பாலத்தின் மையப் பகுதி, அதாவது இரயில்பாதைக்கு மேலுள்ள பகுதியை இரயில்வே துறையும், அதனை சாலையுடன் இணைக்கும் இரு பகுதிகளை மாநகராட்சியும் கட்டமைக்க வேண்டும். இதற்காக, மையப் பகுதியின் கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மையப் பகுதி கட்டி முடிக்கப்பட்ட பிறகு, மாநகராட்சி மற்ற பகுதிகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதம் காலதாமத்தில் வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்து, இன்று (02.10.2025) மீண்டும் மாரிஸ் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை இரயில்வே துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நேரில் ஆய்வு செய்தேன். இதன்போது, கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து விரிவாக விசாரித்தேன். இந்த பின்னடைவிற்கு ஒப்புதல் மற்றும் அனுமதி பெறுவதற்கான நடைமுறையில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று பதிலளிக்கப்பட்டது.

மேலும், அடுத்தடுத்து நடைபெற வேண்டிய பணிகளின் செயல்திட்டங்கள் மற்றும் காலக்கெடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக இரயில்வே நிர்வாகம் 2026, பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்துதருவதாகவும், அதன் பிறகு இரண்டு மாதத்தில் மாநகராட்சி கட்ட வேண்டிய பாலத்தின் இரு பகுதிகளையும் கட்டிமுடித்து, 2026, ஏப்ரல் இறுதிக்குள் மாரிஸ் மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பின்னர், அரிஸ்டோ மேம்பாலக் கட்டுமானப் பணிகளின் நிலையை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வில் இரயில்வே துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் உடனிருந்தனர்.

அரிஸ்டோ மேம்பாலக் கட்டுமானப் பணி நான்கு மாதம் தாமத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கும் இரயில்வே நிர்வாகத்திடமிருந்து பெற வேண்டிய ஒப்புதல் மற்றும் அனுமதிக்கான தாமதமே காரணமாக சொல்லப்படுகிறது.

அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள தாமதங்களைச் சரிசெய்து, விரைவாக முடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதன் அடிப்படையில், 2026, ஜனவரி இறுதிக்குள் இரயில்வே மேம்பாலப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் பிற்கு நான்கு மாத காலத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை தாம் கட்டவேண்டியப் பகுதிகளை கட்டிமுடித்து 2026, மே மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர்.

திருச்சி மாநகரின் முக்கியமான இந்த இரு மேம்பாலங்களும் கட்டிமுடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அசெளகரியங்களையும், போக்குவரத்து நெரிசல்களையும் சந்திப்பதுடன், அப்பகுதியில் தொழில் செய்பவர்கள், வணிகர்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை இனியும் நீடிக்கக்கூடாது என்று துறை அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் என் உரிமையோடு கேட்டுக்கொண்டேன்.

குறிப்பாக ஒப்பந்ததாரர்களை அழைத்து இரயில்வே மற்றும் மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலித்துறையிடமிருந்து தங்களுக்கு ஏதேனும் பணிகள் தாமதமானாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ என்னை எந்நேரமும் அணுகலாம் என்றும், அதற்கான பணிகளில் நான் ஒத்துழைக்க தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொண்டேன்.

இந்த காலக்கெடுவோடு மாற்றி அமைக்கப்பட்ட புதிய செயல்திட்ட அறிக்கையை விரைந்து என் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெற்ற பணிகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அதனை ஒப்பந்ததாரர்களும் துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.

திருச்சியின் முக்கிய மேம்பாலங்களான மாரிஸ் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம் உயர்தரத்துடன் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

மாரிஸ் மேம்பாலம் 2026, மே மாதமும், அரிஸ்டோ மேம்பாலம் 2026, ஜூன் மாதமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் நம்புகிறேன். இதற்காக, இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நேரத்தில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!