மதுரை மாவட்டம் தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24) விபத்தில் கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள். இந்த நிலையில் ராகவிக்கும், மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கு 21 வயது தான் ஆகிறது. ராகவியைவிட 3 வயது இளையவர். 2 குழந்தைகளின் தாய், வயதில் சிறியவருடன் காதலிப்பதை அறிந்த அவரது உறவினர்கள் கண்டித்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமாரும், ராகவியும் திருமணம் செய்து கொண்டு திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ராகவி வீட்டை விட்டு வரும்போது தனது நகைகளையும் எடுத்து சென்று விட்டார். இது குறித்து பெற்றோர் மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர். இருவரும் பைக்கில் விசாரணைக்கு சென்றனர். நள்ளிரவு 11.30 மணி ஆகியும் பஞ்சாயத்து முடியவில்லை.
எனவே நாளைக்கு(இன்று) மீண்டும் விசாரணைக்கு வரும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அய்யாபட்டி விலக்கு அருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் வந்து இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீழே விழுந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய ராகவியின் உறவினர்கள் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.