Skip to content

இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்!

இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியின் சிறப்பு விரிவாக்கமாக இளைஞர்களின் கனவுகள் மற்றும் எதிர்கால இலக்குகளை நேரடியாகப் பதிவு செய்து அவற்றை கொள்கை உருவாக்கத்தில் இணைக்கும் நோக்குடன் ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களிடமிருந்து கருத்துகளைப் பெற Youth Dream Portal (இளைஞர் கனவு தளம்) தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளம் 20 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும். இளைஞர்கள் QR கோடு அல்லது இணைய இணைப்பு மூலம், தங்களின் உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால கனவுகள் / இலக்குகள் குறித்து இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம். இவை 2030-ஐ நோக்கிய கொள்கை திட்டமிடலுக்கு அடிப்படையாக அமையும்.

இந்த தளம் மூலம் கொள்கைகள் உருவாகும் முன்பே இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் பங்கேற்பு ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இது அமைகிறது.

இளைஞர் கனவு தளத்தை இந்த இணையதள முகவரியில் அணுகலாம்:
https://enkanavu.tn.gov.in

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த தளத்தை பிப்ரவரி 4 அன்று காலை 10:30 மணிக்கு திண்டிவனத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில், அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

error: Content is protected !!