பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஜஹாலாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, பாட்னா சித்ரகுப்தா நகரில் உள்ள ஷம்பு பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 5-ம் தேதி விடுதிக்குத் திரும்பிய அவர், மறுநாளே தனது அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இது தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருந்ததால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. “எங்கள் மகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், விடுதி நிர்வாகம் உண்மையை மறைக்கப் பார்க்கிறது” என மாணவியின் குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சம்பந்தப்பட்ட பெண்கள் விடுதிக்கு அதிரடியாகச் சீல் வைத்தனர். விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் ரஞ்சன் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாணவியின் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கார்கில் சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதற்கிடையே அவுரங்காபாத்தைச் சேர்ந்த மற்றொரு 15 வயது நீட் மாணவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், அங்குள்ள பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

