கோவை, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவியரின் விடுதி, தனியார் விடுதிகளும் உள்ளன. இதனால் இப்பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் எப்பொழுதும் சந்தை கடை போல் இருக்கிறது.
மேலும் இப்பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்கள் கையில் கம்பு, நீளமுள்ள பேட்டரி டார்ச் லைட்டுகள் ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக நோட்டமிட்டு வருகின்றனர். இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.