பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ரூ.4.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூர் பிரிவில் மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் 3 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடி மதிப்பிலான 277 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 13 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைசூரு பிரிவில் 13 வழக்குகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் உப்பள்ளி பிரிவில் 13 வழக்குகளில் ரூ.66 லட்சம் மதிப்பிலான 68 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரயில்வே போலீசார் நகரின் முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்புவதால், கடத்தல்காரர்கள் எந்த சோதனை முறையும் இல்லாத சிறிய ரயில் நிலையங்களை தேர்ந்தெடுத்து அங்கிருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு செல்கின்றனர். ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை நடத்தும்போது கஞ்சாவை வேறு பெட்டியில் வைத்து விட்டு, கடத்தல்காரர்கள் வேறு பெட்டியில் ஏறிக்கொள்கின்றனர். இதனால் அதிக நேரங்களில் கஞ்சா மட்டுமே சிக்குகின்றன. கடத்தல்காரர்கள் சிக்குவது இல்லை என்றும் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திராவில் இருந்து தான் ரெயில்களில் கஞ்சாவை எளிதில் கொண்டு செல்கின்றனர். அவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் செல்போன் தொடர்பு மூலம் நடத்தப்படுகின்றன என்று தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.