Skip to content

நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு, நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைந்த முக்கியமான தருணத்தில், முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ராணுவ தளபதி காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். ராணுவத்தை அரசியல் தலைமை தனித்து விட்டுவிட்டது என்று நரவானே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பில் இவ்வளவு பெரிய நெருக்கடி நிலவும்போது, பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்கிறார். இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் என்னைத் தொடர்ந்து தடுக்கின்றனர். நாடு கேள்வி கேட்கிறது, ஆனால் அரசு பதிலளிக்காமல் ஓடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்துள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், ஓய்வுபெற்ற பிரிகேடியருமான அனில் குப்தா, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். “ஆயுதப் படைகளின் செயல்பாடுகளை ராகுல் காந்தி மிகக் குறைந்த அளவிலேயே புரிந்து வைத்துள்ளார். அரசியல் விவாதங்களுக்குள் ராணுவத்தை இழுப்பது தவறானது. கடந்த காலங்களில் கார்கில் போர் உள்ளிட்ட முக்கிய தருணங்களில், அந்தந்த நேரடி ராணுவ அதிகாரிகளின் முடிவின்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காகப் பிரதமரிடம் அனுமதி கேட்டு ராணுவம் காத்திருப்பதில்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!