அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS- National Means Cum Merit Scholarship Scheme) தேர்வில் வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரையிலான 4 வருடங்கள் மாதம் ரூ.1000 விதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் நிதி உதவி பெறலாம்.
ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் இத்தேர்வு நடைபெறும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி.,பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும். தேர்வு கட்டணம் ரூ.50. பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக விண்ணப்பித்து, அரசு அறிவிக்கும் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வை எழுத வேண்டும்.
தேர்வுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு கணக்கு, அறிவியல் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். ஒவ்வொரு தாளிலும் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி. எஸ்டி, பிரிவை சார்ந்தவர்கள் 32 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. இரண்டு தேர்வுகளும் அடுத்தடுத்து அரை மணி நேர இடைவெளியில் நடத்தப்படும். விடைகளை ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிக்க வேண்டும்.
இந்த தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாஜிரா இர்பானா,
சாருமதி ஆகியோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றனர். எனவே இவர்களுக்கு 4 வருடத்திற்கு நிதி உதவி கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி அன்னவாசல் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாலை மதுரம் வாழ்த்தி இருவருக்கும் தலா ரூ ஆயிரம் ரொக்கத்தை ஊக்க தொகையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்
வ. சிராஜூனிசா, உதவித் தலைமை ஆசிரியர் இ. விர்ஜின் டயானா ஆகியோரும் மாணவிகளை வாழ்த்தினர்.