கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள் அமைச்சரும், எம்.பி-யுமான அனுராக் தாகூர், கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா, முன்னாள் DGP-யும், எம்.பி-யுமான பிரிஜ்லால், ஆந்திர எம்.பிபுட்ட மகேஸ் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியானது. அதன்படி, கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையிலான என்.டி.ஏ எம்.பிக்கள் குழு தமிழகம் வந்துள்ளது.
இன்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை குழுவின் தலைவர் ஹேமமாலினி, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளோம். இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வு செய்து தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
இதனையடுத்து, கோவையில் இருந்து காரில்க ரூர் சென்றபோது என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் ஹேமமாலினி அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றார்.