Skip to content

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

தஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர் வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இந்த மையங்களில் 4,474 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை தஞ்சை புதுக்கோட்டை சாலை விமானப்படை நிலையம் அருகே ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 360 பேரும், தஞ்சை புதுக்கோட்டை சாலை இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 360 பேரும், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் (மையம்-1) 600 பேரும், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் (மையம்-2) 600 பேரும் எழுதுகின்றனர். அதேபோல் தஞ்சை மானம்புச்சாவடி கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 பேரும், தஞ்சை மேரீஸ்கார்னர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 504 பேரும், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 720 பேரும், வல்லம் பஸ் நிலையம் அருகே அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 பேரும், தஞ்சை மேரீஸ்கார்னர் புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 214 பேரும், தஞ்சை-திருச்சி சாலை திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 270 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
error: Content is protected !!