ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுகி பட்டேல் (18) என்ற மாணவி, கோட்டாவின் பெசண்ட் விஹார் பகுதியில் தங்கி அங்கிருந்த பயிற்சி மையம் ஒன்றில் இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று இரவு மாணவி ஜுகி பட்டேல் தான் தங்கியிருந்த விடுதி அறையில் திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தேர்வு அழுத்தமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

