நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மேயர் பதவியை பி.எம்.சரவணன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் 25வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரை எதிர்த்து திமுக அதிருப்தி வேட்பாளர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இதனால் தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 55 வாக்குகளில் 54 வாக்குகள் பதிவானது. ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு. ஆணையர் வாக்கு எண்ணிக்கை நடத்தினார். இதில் மேயராக திமுக வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். போட்டி வேட்பாளர் பவுல்ராஜ்க்கு 23 வாக்குகள் கிடைத்தது. போட்டி வேட்பாளர் 23 வாக்குகள் பெற்றது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
59 வயதான ராமகிருஷ்ணனுக்கு வரும் 22ம் தேதி பிறந்தநாள். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளார். ராமகிருஷ்ணனின் மனைவி காந்தீஸ்வரி. இவர்களுக்கு மகாராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலராக ராமகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது, மாநகர மக்களின் பிரச்சினைகளுக்காக மாமன்றத்தில் தீவிரமாக குரல் கொடுத்ததுடன் கடும் போராட்டங்களையும் முன்னெடுத்து இருக்கிறார். இதையடுத்து 2022-ம் ஆண்டும் மீண்டும் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டு தினந்தோறும் சைக்கிளில் தான் வார்டுகளில் வலம் வருவார். அவருக்கு பைக் ஓட்டத் தெரியாது. இன்றும் மேயர் தேர்தலுக்காக சைக்கிளிலேயே மாநகராட்சிக்கு வந்தார்.