Skip to content

நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக சீவலப்பேரிக்குச் சென்றிருந்த நிலையில், ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், தாங்கள் சீவலப்பேரியில் இருந்து வருவதாகக் கூறி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர். ஆண்டிச்சி உள்ளே சென்று தண்ணீர் எடுக்க முயன்றபோது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர்கள், அவரது வாயை அமுக்கி, கை கால்களை கயிறால் கட்டிப் போட்டனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 15 சவரன் நகைகளைப் பறித்தனர். மேலும் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 சவரன் நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர்.

தப்பிச் செல்லும் முன்பாக, வீட்டின் முன்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை அந்த மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சுத்தமல்லி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிய நிலையில் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!