தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 நாட்கள் ஆகியும் அவர்கள் சடலத்தை வாங்க மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று நெல்லை வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் அவர் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சப்இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார். தாயார் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை தேடி வருகிறார்கள். சப்இன்ஸ்பெக்டர்களின் செல்போன் உரையாடல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.