புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (02.05.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, , திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டா் அருணா கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்துதல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 55 திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்கான வீட்டுமனைப் பட்டா, சிறுதொழில் கடன், ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இம்மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இம்முகாமில் திருநங்கைகளுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கான கடனுதவிகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த மாதம் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் திருநங்கை ஒருவர் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்ததன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றையதினம் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ஒரு திருநங்கைக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
எனவே, திருநங்கைகளின் நலனிற்காக செயல்படுத்தப்படும் தமிழக அரசின் நலத்திட்டங்களை திருநங்கைகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் .
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் , மாவட்ட சமூகநல அலுவலர் .ந.கோகுலப்பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் .சே.கி.குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
