ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் கோவையில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 30,000+ பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகள் பங்கேற்கின்றன.
மேலும் 150க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75க்கும் மேற்பட்ட தொழில் வளர்மையங்கள், 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாடு கோவையில் நடப்பது மிக பொருத்தமானது. இந்த மாநாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது என கூறினார்.
புதிய சிந்தனைகள், முயற்சிகள் தொழில்துறைக்குள் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளை, ஊக்குவிப்பை தமிழக அரசு செய்துவருகிறது. தொழில்துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் இலக்கு என்பது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தெழில் சார்ந்த விழிப்புணர்வு பரவவேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் புது யுக தொழில்முனைவு சார்ந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும். இந்த இலக்குக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை தலைசிறந்த புத்தொழில் மையமாக கட்டமைப்பது தான் திராவிட மாடல் அரசின் கனவு. அந்த பயணத்தின் முக்கிய மையமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ துவக்கப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டு புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். இந்த நிதியம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தால் நிர்வகிக்கப்படும். இதனால் மாநிலத்தில் புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். மேலும் உலகில் முன்னணி இடத்தில் இருக்கும் முதலீட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி ஈர்க்க வழிவகுக்கும் என அவர் கூறினார்.