திருச்சி எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி முதல் ஐடி பார்க் வரையுள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாகவும், புதிய சாலை அமைத்துத் தரவேண்டும் என்றும், மேலும், மிகவும் பழுதான பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் அமைத்துத் தரவேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நான், அவர்கள் குறிப்பிட்ட அந்த சாலையை அன்றைய தினமே பார்வையிட்டேன். சாலை மிகவும் குண்டும், குழியுமாகவே இருந்தது. சோழமாதேவி பழைய பாலமும் சேதமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டேன்.
இவ்விரு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு முயற்சிக்கிறேன் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தேன்.
அன்றைய மறுநாள் 10.06.2025 அன்று என் தலைமையிலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA) இந்த கோரிக்கையின் அவசியம் குறித்துப் பேசினேன்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களிடம், 11.07.2025 அன்று நேரில் சந்தித்து மறுபடியும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தேன்.
என் கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் , ஐ.டி. பார்க் முதல் சோழமாதேவி செல்லும் சாலை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கிட உத்தரவிட்டுள்ளார் என்றும், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனக்கு தகவல் வந்தது.
உடனடியாக மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களை தொடர்பு கொண்டு, அவ்விடத்தில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட அறிவுறுத்தினேன்.
அதன்படி அவரும், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 01.08.2025 இன்று இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் வேலையைப் பார்வையிட்டனர்.
அப்போது, சோழமா நகர் மக்கள் நல மன்றத்தின் தலைவர் மா.கிருஷ்ணமூர்த்தி, அப்பகுதியைச் சேர்ந்த 81வயது பெரியவர் ராஜப்பா, இளைஞர் தனசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள், கோரிக்கை மனு வழங்கிய ஒரு மாதத்தில் சாலைப் பணிகள் நடைபெறுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. நாடாளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்குமாறும் கூறினார்கள் என்பதை அறிந்தேன்.
இதுபோன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்யும் போது, மக்கள் அளிக்கும் பாராட்டு எனக்கானது இல்லை. அது என்னை தேர்ந்தெடுத்த திருச்சி மக்களுக்கானது என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும், சோழமாநகர் மக்களின் புதிய பாலம் கட்டும் கோரிக்கையையும் விரைந்து செயல்படுத்திட தொடர் முயற்சி எடுப்பேன். எனது கோரிக்கையை ஏற்று சோழமாதேவி பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திருச்சி தொகுதி மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.