உத்தர பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டம் காதியா சுஹாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் (23) மற்றும் சிவானி குமாரி (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பிரயாக்ராஜில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தனியாக வசித்து வந்த நிலையில், குடும்பத்தினர் அழைத்ததன் பேரில் கடந்த சனிக்கிழமை சிவானி மட்டும் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவியைப் பார்ப்பதற்காகத் தீபக் குமார் அங்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சிவானியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இருவரையும் உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கினர்.
அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு திரண்டனர். ஆனால், கூடியிருந்த மக்கள் முன்னிலையிலேயே கூர்மையான ஆயுதத்தால் சிவானி மற்றும் தீபக்கின் கழுத்தை அறுத்து பெண் வீட்டார் கொடூரமாகக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்து ஓடிய தீபக் குமாரை விரட்டிச் சென்று கொன்ற கும்பல், அவரது உடலைப் பக்கத்து வீட்டின் மேற்கூரையில் வீசிச் சென்றது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றினர். சிவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீபக் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம் நாராயண் சிங் கூறுகையில், “இந்த இரட்டைக் கொலை தொடர்பாகச் சிவானியின் தந்தை அசோக் குமார், தாய் விட்டோலி தேவி மற்றும் சகோதரி ஷில்பி ஆகியோரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள சகோதரர்கள் சதீஷ் மற்றும் ஜாபர் சிங் ஆகியோரைத் தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தனது கண்முன்னே மகனையும் மருமகளையும் கொடூரமாகக் கொன்றதாகத் தீபக் குமாரின் தந்தை ராதேஷியாம் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

