பிரதமர் மோடி ஆட்சி ஏற்பட்டவுடன், மத்திய திட்டக்குழுவை கலைத்தார். அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார். 2015 ஜனவரி 1ம் தேதி இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
திட்டக்குழு என்ன செய்ததோ, அதையேத்தான் நிதி ஆயோக்கும் செய்கிறது. பெயர் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த அமைப்பின் கூட்டம் நடைபெறும்.
கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அதுபோல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளா, கர்நாடகம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் கூட்டத்தை புறக்கணித்தனர். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு என்ற பெயர் கூட பட்ஜெட்டில் இல்லை, மெட்ரோ ரயில் திட்டங்கள், கல்வி நிதி , வெள்ள நிவாரண நிதி என எதுவுமே தராததால் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டார்.
என் வழி தனி வழி என சொல்லிக்கொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த ஆண்டு நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு போனார். தான் பேசிக்கொண்டிருந்தபோது 5 நிமிடத்தில் மைக் ஆப் செய்யப்பட்டது என்று கூறி வெளிநடப்பு செய்தார். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு 20 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் 2025ம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு வந்துள்ளது.
இந்த முறையும் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த முறை முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இதற்காக 23ம் தேதியே டில்லி செல்கிறார்.
அப்போது பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையிலும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமரை மட்டுமல்ல, பல்வேறு தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
திமுகவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மக்களுக்கு பிடிக்காத கட்சியின், ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது என்றாலும், அவர்களிடம் தான் நாம் நிதி கேட்டு பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
காரணம்…….நம்மிடம் பல்வேறு வகைகளில் வரிகளை வாரிக்கொண்டு போகும், மத்திய அரசு தானே தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி கொடுக்க வேண்டும். ? ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில் தான் இன்னமும் செயல்படுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியில் ஒரு பகுதி கூட தமிழகத்திற்கு வழங்காத மத்திய அரசு, இப்போதாவது தமிழகத்திற்கு உரிய பங்கினை தருமா? என்பது தெரியவில்லை. அதற்காக நாம் சும்மா இருந்தால் எப்படி?
ஊதுகிற சங்கை ஊதிவிட்டு வருவோம், விடியும்போது விடியட்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார்.
ஆனால் தமிழக முதல்வரின் டில்லி பயணம் குறித்து கட்டுக்கதை அளக்கும் எடப்பாடி பழனிசாமி போல தமிழக முதல்வர் ஒளிந்து, மறைந்து டில்லி செல்லவில்லை. அதிமுக அலுவலகத்தை பார்க்க டில்லி போகிறேன் என கூறிவிட்டு அமித்ஷாவை பார்த்து கூட்டணி பேசிய எடப்பாடி போல, தமிழக முதல்வர் டில்லி போகவில்லை. எதற்காக போகிறேன் என்பதை அறிவித்து விட்டு தான் போகிறார். அவரது பயணம் தமிழகத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் வயிற்றெரிச்சலில் புலம்பும் எடப்பாடி போன்றோரின் அறிக்கைகளை , ‘அரசியல் டெட் பாடிகள்’ என ஒதுக்கித்தள்ளுவோம். வெல்லட்டும் தமிழக முதல்வரின் டில்லி பயணம், மேலும் வளரட்டும் தமிழகம்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “”மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்… இன்று… டாஸ்மாக்… தியாகி… தம்பி… வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு!” என்று தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி, 2024 ஜூலையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார்.
நடப்பு ஆண்டிற்கான நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம், வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். அப்போது, பிரதமரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.