Skip to content

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து பேசினார்.
அவர் மக்களவைக்கு வராதது பற்றி குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்தனர் என திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். ஆனால், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என காங்கிரஸ் கட்சி மறுத்தது. இந்நிலையில், பிர்லாவுக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் கூறும்போது, நாங்கள், 94சி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளோம். இதில் மொத்தம் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர் என கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி, அதனை அவையின் பொது செயலாளருக்கு ஓம் பிர்லா அனுப்பினார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில், மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது, அவையில் எதிர்க்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், பலத்த கோஷமும் எழுந்தது. அமளியும் தொடர்ந்தது. எனினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி அதனை தோல்வியடைய செய்தனர். அவையில் பெரும்பான்மையான எம்.பி.க்களை பா.ஜ.க. வைத்துள்ள சூழலில், இந்த தீர்மானம் எளிதில் தோல்வியடைந்து உள்ளது.

error: Content is protected !!