Skip to content

தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுக்க இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். இதில், மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவான அவருக்கு அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக கரூர் தவெக நகரச் செயலாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் கடந்த 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றியும், அந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட மூவர் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து மாநில சிறப்பு புலனாய்வு குழு, கரூர் சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கும் விதமாக கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேபோல், கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற இருவரும், கரூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது அவர்களது குடும்பத்தினரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, அவர்களிடம் நேரில் வந்து தன்னால் பார்க்கமுடியவில்லை என விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும், சிறையில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியானது. கரூர் அசம்பாவிதத்திற்கு பின்னர் 19-ஆம் நாளான இன்று விஜய் தனது கட்சி அலுவலகமான பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!