Skip to content

தற்கொலைக்கு முயன்றேனா? பாடகி கல்பனா வீடியோ வெளியீடு

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில்  பாடியுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு  சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா மயங்கி கிடந்தார்.  உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அளவுக்கு அதிகமாக அவர் தூக்க மாத்திரை தின்றதாக தெரியவந்தது.  சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். நேற்று  பாடகி கல்பனா ஒரு வீடியோ வெளியிட்டார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

“வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை பற்றியும் எனது கணவர் பற்றியும் மீடியாவுல ஒரு தவறான வதந்தி பரப்பிக்கொண்டு இருப்பதால் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன்.

இந்த வயசுல நான் பிஎச்.டி, எல்.எல்.பி என நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டு இருக்கிறேன். மியூசிக்லையும் ரொம்ப தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றேன். இதில் ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதால் பல வருடங்களாக எனக்கு தூக்கம் சரியா இல்லை. இதன்காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது மருந்துகள் கொடுத்தனர். அதில் கொஞ்சம் டோஸ் அதிகமானதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் தருணத்திற்கு சென்றுவிட்டேன்.

 

இன்று நான் உயிரோடு திரும்ப வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்று பட்ட பாடுதான். என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் அவ்வளவு. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். என் கணவர்தான் போலீஸ், மீடியா, ஆம்புலன்ஸ் என எல்லாரையும் ஒருங்கிணைத்து என்னை சரியான நேரத்துக்கு மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.

அதனால் எந்த வதந்திகளையும் நம்பாதீங்க. என் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. கடவுளின் அனுகிரகத்தோடு என் வாழ்க்கையில் கிடைத்த அழகான விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவராக கிடைத்தது. இவ்வளவு அன்பு இருக்குற தயா பிரசாத் என் மகளாக கிடைத்தது.

அதனால் தப்பான வதந்திகளை நம்பாதீங்க. இந்த நேரத்தில் போலீசாருக்கும் எனது ரசிகர்களும், என் உடன் வேலை  பார்ப்பவர்களுக்கும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு வேண்டிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அன்புக்கு நன்றி.

சீக்கிரமே உங்களை பாடல் மூலமாக சந்திக்கிறேன். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை நான் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

error: Content is protected !!