முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக இளைஞரணி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு . நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது உச்ச நீதிமன்றம். ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜியின் படத்தையும், “நான் யானை அல்ல… குதிரை டக்குனு எழுவேன்…” என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என்பதை எதிர்பார்க்கும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.