தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கே.வேலவன் (34). 8ம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த 04.01.2026ல் கவிதா என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பார்ட் டைம் ஆன்லைன் வேலை உள்ளது என்று கேன்வாசிங் மெசேஜ் இருந்துள்ளது. இதை பார்த்த வேலவன் அந்த கவிதா என்ற பெயரில் வந்த அழைப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதில் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கிறது. நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்து முடிப்பது மூலமும் உங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது.
இதை நம்பிய வேலவன் அந்த மெசேஜில் கூறியபடி பதிவு செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து சில டாஸ்க் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை சாட்டிங்கில் தெரிவித்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். தொடர்ந்து லாப பணம் என்று ரூ.44 ஆயிரத்தை வேலவனுக்கு வழங்கி உள்ளனர். இதனால் அதிக நம்பிக்கை ஏற்பட்டு 9.1.2026ம் தேதி வரை 12 தவணைகளில் தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து 19,83 லட்சம் ரூபாயை பல்வேறு வங்கிக்கணக்குகளில் வேலவன் டெபாசிட் செய்துள்ளார். இதையடுத்து அவர் சாட்டிங்கில் முயற்சி செய்தபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அப்போதுதான் மர்மநபர்கள் தன்னை ஏமாற்றியதை வேலவன் உணர்ந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வேலவன் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் வங்கி கணக்குகள் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்தந்த வங்கிகளுக்கு இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதில் வேலவன் அனுப்பி வங்கி கணக்குகள் உள்ள 6 வங்கிகளில் ரூ.82 ஆயிரத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் இதுகுறித்து மற்ற வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.

