Skip to content

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த 13-ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விசாரணைக்கு பின் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதல் செய்த முன்னாள் காதலனான சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (24), தனக்கு கிடைக்காத பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி உள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்யும் நோக்கோடு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் லாட்ஜில் கூலிப்படையை சேர்ந்த மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (38) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், நாராயணன் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (20) ஆகிய இருவருடன் சேர்ந்து ஆயுதங்களுடன் ரூம் போட்டு தங்கியிருந்தனர். இது குறித்து தான்தோன்றி மலை தனிப்பிரிவு காவலரும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

அந்த தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கொலை செய்யும் நோக்கோடு ஆயுதங்களுடன் சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவசங்கர், ஆனந்த், ஹரிஹரன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஒரு தலைப்பட்சமாக காதல் செய்த பெண்ணை கொலை செய்வதற்காக கூலிப்படையினருடன் ஆயுதங்களுடன் ரூம் போட்டு தங்கி சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!