ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார்.
பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் வரவேற்றனர்.
19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. மாநாட்டுக்கு புறப்பட்ட அவர் பாதியிலேயே திரும்பி விட்டார். இதுபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்கவில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுவில் உள்ள யாரும் பங்கேற்கவில்லை. கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழ்வேந்தன் மாநாட்டை புறக்கணித்தார். கோவை காருண்யா நிகர்நிலை பல்கலை. துணைவேந்தர் பிரின்ஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி உள்பட அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலர் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை.தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலையில், 6 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கவர்னர் ரவி கூட்டியுள்ள இந்த மாநாட்டுக்கு கல்வியாளர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு உயர்கல்வித்துறை அமைச்சரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். பெரும்பாலான துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு வராததால் கவர்னர் ரவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கிடையே, துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல, தந்தை பெரியார் திராவிடர் கழகம், துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆளுநரைக் கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிடப் போவதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.