2025 ஆகஸ்ட் 7ம் தேதி நள்ளிரவு உலகமே அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது. அதே நேரம் பாகிஸ்தானில் முகாமிட்டு நாசவேலைகளை செய்து வந்த தீவிரவாதிகளின் தூக்கத்தை தொலைத்தது இந்திய ராணுவம். ஆம்…….. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தனது தாக்குதலை தொடங்கியது. தாக்குதல் வெகுநேரம் நீடிக்கவில்லை. சொல்லிவைத்தாற்போல் 25 நிமிடங்களில் 9 இலக்குகளை ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கின. இதில் 70க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சூட்டிய பெயர் சிந்தூர். ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது ? சிந்தூர் என்ற இந்தி வார்த்தைக்கு குங்குமம், திலகம் என தமிழில் பொருள்படும். ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த 26 பேரில் ஒருவர் கடற்படை வீரர். திருமணம் முடிந்து ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் அந்த கடற்படை அதிகாரி தனது மனைவியுடன் தேனிலவுக்கு சென்றார்.
அப்போது தான் அந்த அதிகாரி தீவிரவாதிகளால் கொல்லப்ட்டார், அவரது மனைவி தனது குங்குமத்தை இழந்தார். தனது கணவரின் உடல் அருகே அந்த பெண் அமர்ந்து கதறிய காட்சி உலகத்தையே உலுக்கியது. அந்த பெண் இழந்த குங்குமத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இந்த ஆபரேசனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்த பெயரை தேர்வு செய்ததே பிரதமர் மோடி தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக்கூடாது என்பதில் நமது ராணுவம் சர்வ ஜாக்கிரதையாக இருந்தது. தரைமட்டமாக்கப்பட்ட 9 இலக்குகளும் தீரவாதிகளின் புகலிடம், பயிற்சி மையம். எனவே அங்கு இறந்தது யாரும் பொதுமக்கள் அல்ல.
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித்தலைவர்களும் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து உள்ளனர். இதைவிட சிறப்பு என்னவென்றால் உலகின் எந்த நாடும் இந்தியாவின் தாக்குதலை கண்டிக்கவில்லை. காரணம் நம்மிடம் நீதி இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். அத்துடன் தீவிரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதிலடி கொடுக்கப்பட்டதால் இந்தியாவின் இறையாண்மை உலக அரங்கில் மேம்பட்டு உள்ளது.
இத்தனைக்கும் மேலாக இந்த தாக்குதல் குறித்து உலகுக்கு அறிவித்தது இரண்டு பெண் அதிகாரிகள். ஒருவர் லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, மற்றொருவர் விங் கமாண்டர் வியோமிகா சிங்.
கர்னல் சோபியா குரேஷி, 2016ம் ஆண்டில், இந்தியாவின் புனே நகரத்தில் நடைபெற்ற . ‘போர்ஸ் 18’ எனப்படும் கள பயிற்சிக்கு இந்திய படைக்கு தலைமை தாங்கியவர். , தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ASEAN Plus) உள்ளடக்கியது இந்த பயிற்சி . இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய தரைப்படைப் பயிற்சி இதுவாகும்.
இந்தக் களப்பயிற்சியில், 40 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைக்கு லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி தலைமை தாங்கினார். முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் பன்னாட்டு களப்பயிற்சியில் இந்திய ராணுவப் பயிற்சிக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.
குஜராத்தைச் சேர்ந்த சோபியா குரேஷி, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். குரேஷி ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்.
சோபியா குரேஷியின் கணவர் தாஜூதீன் குரேஷியும் இந்திய ராணுவ அதிகாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சோபியா குரேஷி ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். இதில் 2006ம் ஆண்டு காங்கோவில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றியதும் அடங்கும்.
வியோமிகா சிங், என்சிசியில் இருந்தவர். பொறியியல் படித்துள்ளார். அவர் 2019ம் ஆண்டு இந்திய விமானப்படையின் முழு நேர விமானியாக நியமிக்கப்பட்டார்.
வியோமிகா சிங் 2500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடினமான சூழ்நிலைகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார்.
பல மீட்பு நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 2020ல் நடந்த மீட்பு நடவடிக்கை.
வியோமிகா சிங்கின் தந்தை மத்திய அரசு அதிகாரி. அவர் தமிழ்நாட்டில் திருச்சியில் பணியாற்றியபோது வியோமிகா சிங் திருச்சி கேந்திர வித்யாலயாவில் படித்தவர். தனது பி.டெக் படிப்பை காஞ்சிபுரத்தில் படித்துள்ளார்.
இந்த இரு பெண் அதிகாரிகள் , இந்திய ராணுவம் எப்படி தாக்குதல் நடத்தியது என்பதை உலகுக்கு அறிவித்ததோடு மட்டுமல்ல, தீவிரவாதிகளுக்கும் சேர்த்து தான் அறிவித்தனர். அப்போது அவர்கள், ஆபரேசன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கும் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் எச்சரிக்கை விட்டது பாகிஸ்தானுக்கு உள்ளபடியே பீதியை கிளப்பி விட்டது. இனியாவது தீவிரவாதத்தை விட்டு நல்வழிக்கு திரும்பினால் சரி.