கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த கிராமத்தை சுற்றி விவசாய நிலங்களும் உள்ளன.
இந்நிலையில் இக்கிராமம் வழியாக ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள், உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் செல்வதால் அவ்வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று

நள்ளிரவு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு நேரில் வருவதாக உறுதி அளித்ததாக அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள் மனு அளிக்க வந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 5 முதல்7 நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட முடியும் என்று கூறியதால் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் முக்கியஸ்தர்கள் கை குழந்தைகளுடன் சென்ற பெண்கள் மூன்று பேர் உட்பட ஏழு பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். தற்போது அவர்கள் உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

