Skip to content

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

சிந்து போர் பயிற்சி என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் 450 கி.மீ சென்று தாக்கும் அப்தலி என்ற ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை அதிகரித்தது. இந்நிலையில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பிரதமர் மோடியை நேற்று முன்தினம் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2016-ல் உரி பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தி தீவிரவாதமுகாம்களை இந்தியா அழித்தது. 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் குண்டு வீசின.

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பிரதமர்மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் நடைபெறும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்காக, நமது எதிரிகளுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும்’’ என்றார்.

 பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இத்தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மிகவும் பழமையானவை. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததால் வெடிமருந்து தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவில்லை. அதனால் இங்கு உடனடியாக வெடிமருந்து பொருட்களை அதிகளவில் தயாரிப்பது சிரமம். பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி படையைத்தான் அதிகளவில் சார்ந்துள்ளது. அப்படைக்குத் தேவையான தளவாடங்கள் குறைவாக இருப்பது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் ராணுவத்தை விட்டே ஓடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அப்படி ஓடியவர்கள் உடனடியாக  பணிக்கு வரவேண்டும் என ராணுவம்  கூறி வருகிறது. இப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!