Skip to content

“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 400 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராகப் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. ஈஸ்வரசாமி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தமிழக முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகப் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், மருத்துவக் காப்பீடு மற்றும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாகப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே குடும்பத் தலைவிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் தருவதாகக் கூறி வருகிறார் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை அறிக்கையைத் தெரிந்து கொண்ட பின்பு அந்தத் தொகையைத் தருவதாக அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் விமர்சித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் குமரன், நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், அமுத பாரதி, ஒன்றியச் செயலாளர்கள் தேவசேனாதிபதி, யுவராஜ், ஹிமாலயா யுவராஜ், பேரூராட்சித் தலைவர் அகத்தூர் சாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!