பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்,வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்செய்ய வேண்டும்., 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரித்தல், இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஸ்டிரைக் செய்யப்போவதாக 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியூ, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று இந்தியா முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இந்த ஸ்டிரைக் காரணமாக கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பரவலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, வங்கிகள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
கேரளாவைப் பொருத்தவரை பெரும்பாலான நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்லாது தனியார் வாகனங்களும் இயக்கப்படாததால் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. கோழிக்கோட்டில் ஓடிய அரசுப் பேருந்துகளை தடுத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் காலை முதலே பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுச்சேரியில் இன்று ஸ்டிரைக் ஓரளவு ஆதரவுடன் நடந்து வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. திரையரங்கு,மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன.
ஒடிசாவில் சிஐடியு-வின் ஆதரவு அமைப்பான கோர்தா மாவட்டப் பிரிவு உறுப்பினர்கள் பந்த்துக்கு ஆதரவாக புவனேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் மாணவர் அணியினர் ஜெஹனாபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாதவ்பூர் உள்பட பல ரயில் நிலையங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஜாதவ்பூர் 8B பேருந்து நிலையப் பகுதிகளைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை இயக்குவதையும் காண முடிந்தது.
.