தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரியவர்கள் 28 பேர், ஒரு குழந்தை, பள்ளி மாணவர்கள் 3 பேர், கல்லூரி மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 37 பேர் அடங்குவர்.
பெரும்பாலும் நீர்நிலைகளில் நீச்சல் தெரியாதவர்கள் கவனக்குறைவாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீர் மழை மற்றும் அணை திறப்பு காரணமாக நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் மூழ்கும் அபாயமும் உள்ளது. நீச்சல் தெரிந்திருந்தாலும், ஆறுகள், கால்வாய்கள் போன்ற இடங்களில் வேகமான நீர் ஓட்டம், சுழல் ஓட்டம் ஆகியவற்றில் சிக்கி மனிதர்கள் உயிரிழக்கிறார்கள்.
நீர்நிலைகளில் செல்பி எடுப்பது, நண்பர்களுடன் ஆற்றின் கரைகளில் விளையாடுவது மற்றும் செல்லப்பிராணிகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனவே, மதிப்புமிக்க மனித உயிர்களின் அவசியம் கருதி ஒவ்வொருவரும் தமது குடும்பம் மற்றும் சமுதாய பொறுப்பை உணர்ந்து நீர்நிலைகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விடுமுறை நாட்களில் குழந்தைகள் நீர்நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
