Skip to content

தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

தெலங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகரிடம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் பார்க்கிங் பிரச்சனை, இந்தியா முழுவதும் இருக்கிறது. அதாவது அதிக கட்டணம் வசூலிப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில், முன்னதாக கே.சி.சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கிள் திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இதை பின்பற்றின. ஆனால் சிங்கிள் திரையரங்குகள் தங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தின. இதையடுத்து 2021ஆம் ஆண்டு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதித்து அரசாணை வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு திரையரங்கில் ரூ.20 பார்க்கிங் கட்டணம் வாங்கியதாக பிரேம் ராமாவத் என்பவர் தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சிங்கிள் திரையரங்கில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதோடு பார்வையாளர்கள் ஒரு டிக்கெட் வைத்திருந்தால் அவருக்கு பார்க்கிங் இலவசமாக வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. இதனை அடுத்து சினிமா டிக்கெட் வாங்கிய ஒரு ரசிகரிடம் தனியாகப் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. இந்தத் தீர்ப்பு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கும் பொருந்தும். இதனை உடனடியாக அமல்படுத்த அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!